மூளாய்க் கிராமத்தின் முற்றத்தில் கால்பதிப்போம்   (In English....)   இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த கிராமம் தான் மூளாய் ஆகும். இது யாழ் நகரிலிருந்து 12கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. பொன்னாலை வீதி, மாவடி வீதி என்னும் இரு முக்கிய வீதிகள் இக்கிராமத்தினை ஊடறுத்துச் செல்கின்றன. வட்டுக்கோட்டை, தொல்புரம், பொன்னாலை, சுழிபுரம் என்னும் கிராமங்களால் சூழப்பட்டு அழகுற திகள்கிறது மூளாய்க் கிராமம்.   கோயிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பதற்கமைய இங்கு வரலாற்று மகிமையும் மூர்த்திகரமும் நிறைந்த சைவ ஆலயங்கள், புகழ் பெற்ற கிருஸ்தவத் தேவாலயங்கள் பல ஆங்காங்கே அமையப்பெற்று கிராமத்தினைப் புனிதப்படுத்துகின்றன.   ஒரு காலத்தில் இக் கிராமத்திலிருந்து வெற்றிலையும் சிறு தானியங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இக் கிராமத்தினைச் சேர்ந்த அன்பர் ஒருவரினால் வழங்கப்பட்ட ஓர் பெரிய மணி இன்றுவரை சிதம்பரத்தில் மூளாயின் பெயர் பரப்பி நிற்கின்றது.   பரந்த வயல்நிலைப் பரப்புக்கள் தோட்டங்கள் என்பன கிராமத்தின் வேளாண்மை விருத்தியை விளக்கி நிற்கின்றன. அவற்றிற்கு உணவூட்டும் குளங்கள் கேணிகள் என்பனவும் அழகிய காட்சிகள் ஆகும். பாரம்பரிய தொழிலான உழவுத் தொழிலை மேற்கொள்பவர்கள், கல்விமான்கள், கவிஞ்ஞர்கள், வைத்தியர்கள், இசைவல்லுனர்கள், சட்டத்துறைவல்லுனர்கள், சிற்பச்சித்திரத் திறனாளிகள், சித்த மருத்துவர்கள் என்று பல துறை அறிவும் அனுபவமும் பெற்றவர்கள் வாழும், வாழ்ந்த கிராமம் மூளாய் கிராமம்.   நீண்ட காலமாக இயங்கிவரும் கூட்டுறவு வைத்தியசாலை, பக்குவமாகவே பலரையும் படியேற்றிவைக்கும் பாடசாலைகள், இளைஞர் அமைப்புக்கள், நூல்நிலையங்கள், முன்பள்ளிகள், அறநெறிப்பாடசாலை, திறன்மிகு விளையாட்டுக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு சமூக அமைப்புக்கள் பரந்து விளங்குகின்றன. இன்னும் இங்கு சிவபிரானின் பெயரைத்தாங்கியுள்ள பித்தனை (பித்தன் அணையுமிடம்) என்ற மயானமும் மகிமைபெற்றுள்ளது. எனவே மூளாய் முற்றத்தில் கால் பதிப்போம் வாரீர்.  
logo
Time & Weather in Moolai now is:
????????? ???????