Victory Sports Club

 

வலி சுமந்து வலிமையோடு தொடரும் பயணம்…

 

(In English...)


காலத்தின் நகாத்தலில் தேக்கநிலை ஏற்படும் போதெல்லாம் புதியவற்றின் பிறப்பெடுத்தல்கள் அந்தத்தேக்கநிலையை உடைப்பெடுத்துக் கொண்டு, உத்வேகம் ஊற்றெடுக்க வழிசமைக்கின்றன. விக்ரோறி விளையாட்டுக்கழகத்தின் உருவாக்கமும் அத்தகையதொரு காலத்தின் அவசியத்தால் நிகழ்ந்த ஒன்றே. குறிப்பாக இளையோருக்கான திறன்கள் புறந்தள்ளப்படாமலிருத்தல், அவர்களுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தல் எனும் எண்ணங்கள் கொண்டவர்களின் சிந்தனை விதையின் பிரசவமே விக்ரோறி விளையாட்டுக்கழகம்.


விரல்விட்டு எண்ணிவிடகூடிய இளையோரினால் 1998/1999 இல் உருப்பெற்ற விக்ரோறி, அதன் தவழ்தல் காலத்தில் பல தோல்விகள், சவால்கள், எதிர்ப்புகள் எல்லாவற்றையும் சந்திக்கநேர்ந்தது. குறிப்பாக கிரிக்கெட்டையே தன்னுடைய முதன்மை விளையாட்டாகக் கொண்ட இந்தத் கழகத்திற்கு பயிற்சி செய்ய ஒரு மைதானம் எனற பெயரில் ஒரு துண்டு நிலம் கூட இல்லை. வேறு கழகங்களும் தங்களுடைய மைதானங்களை பயிற்சிக்காக வழங்காமல் கதவடைத்தன. ஆனாலும் இவற்றாலெல்லாம் வீழ்ந்துவிடாமல், வலிகளையே வலிமையாக்கி வீறுகொண்டெழுந்து விக்ரோறி.


தனியாரின் இரவல் காணிகளை மைதானங்களாக தங்களுடைய சொந்தமுயற்சியால் மைதானமாக்கி, பயிற்சிகளை மேற்கொள்ளத்தெடங்கினர் விக்ரோறி வீரர்கள். பிரதேச கழகங்கள் நடாத்திய கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான அடைவை வெளிப்படுத்திய விக்ரோறி எல்லோரது கவனத்தையும் தான் உருப்பெற்ற குறுகியகாலத்திலேயே ஈர்த்தது. 2000ம் ஆண்டில் வலிமேற்கு பிரதேசசெயலகத்தில் தன்னைப் பதிவு செய்து கொண்ட விக்ரோறி, தன்னுடய இன்னொரு சகாப்தத்தை நோக்கி காலடி எடுத்து வைத்தது. விக்ரோறி பதிவுசெய்யப்பட்டு ஒரு சில ஆண்டுகளில் நடாத்தப்பட்ட பிரதேசசெயலக விளையாட்டுப்போட்டிகளில் கிரிக்கெட், எல்லே, வலைப்பந்தாட்டம் என்பவற்றில் வெற்றிக்கிண்ணங்களை சுவீகரித்து. அது மட்டுமல்லாமல் அதே வருடம் பிரதேச செயலக சம்பியனும் ஆகியது.


அதன்பின்னர் தொடர் வெற்றிகளை விக்ரோறி குவிக்கத்தொடங்கியது. இடைவிடாத பயிற்சியும், ஒற்றுமையுமே விக்ரோறியின் வெற்றியின் இரகசியம். தினமும் மாலை மைதானத்தில் அணியின் சகலவீரர்களினதும் பிரசன்னத்தோடு, பயிற்சியாட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெறும். விக்ரோறி தன் வளர்ச்சிப்பாதையின் இன்னெரு கட்டமாக வருடந்தோறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளை கிரமமாக நடத்தத் தொடங்கியது. அணியில் இணையும் வீரர்களின் எண்ணிக்கையும் பெருகத்தொடங்கியது. ஆரம்பத்தில் சுற்றுப்போட்டிகளுக்கு தேடித்தேடி ஆள்பிடித்த காலம் மாறி யாரை அணிக்கு தெரிவு செய்வது எனற இக்கட்டுநிலை ஏற்படுமளவுக்கு வீரர்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தது. இதனால் பயிற்சி ஆட்டங்களில் ஒவ்வொருவரினதும் அடைவுகள் கணிக்கப்பட்டு, அதில் முன்னிலை பெறும் முதல் பதினொருவரே ஆடும் அணிக்கு உள்வாங்கப்படும் முறைமையை விக்ரோறி தன்னுடைய அணித்தெரிவுக்கு பயன்படுத்திக் கொண்டது.


திறமை, ஒழுக்கம், ஒற்றுமை என்பவற்றிலிருந்து தோற்றம் முதல் இன்றுவரை வழுவாது வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகிறது விக்ரோறி. விக்ரோறி அணிவீரர்களின் நீண்டகாலக் கனவான கடினபந்து கிரிக்கெட் அணி இந்தவருடம் சாத்தியமாகியிருக்கிறது. இன்னும் மைதானம் இல்லாத அணியாக "ஒரு அகதி போல" அலைகின்ற போதும் இருக்கும் வளங்களை உச்சவகையில் பயன்படுத்தி விக்ரோறி தன்னுடைய வெற்றிப்பயணத்தை உறுதியுடன் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. லலி சுமந்த வலிமை இன்றும் அந்த வீரர்கள் மத்தியில் வியாபித்திருக்கின்றது.


logo
Time & Weather in Moolai now is:
????????? ???????